வடிவமைப்பு உருவாக்குதல்
நமக்குத் தேவையான வடிவத்தை உருவாக்க முதலில் ஒரு கணினி வழி வடிவமைப்பு (Computer Aided Design - CAD) மென்பொருள் தேவை. இதற்கு சில திறந்த மூல மென்பொருட்கள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். இந்த மென்பொருளைப் பயன்படுத்தி நாம் நமக்குத் தேவையான வடிவமைப்பை முதல்படியாகத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
3D அச்சு செயல்முறைப் படிகள்
பொருள்சேர் உற்பத்திக்குத் தோதான கோப்பு வகையில் சேமித்தல்
இம்மாதிரி மென்பொருட்களில் பலவிதமான கோப்பு வகைகளில் சேமிக்க முடியும். நாம் பொருள்சேர் உற்பத்திக்குத் தோதான கோப்பு வகையில் சேமித்துக் கொள்ளவேண்டும். படத்தில் காட்டியதுபோல STL கோப்புவகையில் சேமித்துக் கொள்ளலாம். பொருள்சேர் உற்பத்திக்குத் தோதான மற்ற கோப்பு வகைகள் யாவை மற்றும் அவற்றில் உள்ள அம்சங்கள், பிரச்சினைகள் என்ன என்று பின்னர் வரும் கட்டுரையில் விவரமாகப் பார்ப்போம்.
பாகத்திற்குத் தேவையான மூலப் பொருளைத் தேர்ந்தெடுத்தல்
அந்த பாகம் எந்தத் தயாரிப்பில் என்ன வேலையை செய்யப் போகிறதோ அதற்குத் தோதான மூலப் பொருளைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக அந்த பாகம் மிகவும் வலுவாகவும், வெப்பத்தைத் தாங்கும்படியாகவும் இருக்க வேண்டுமென்றால் அதை உலோகத்தில் தயார்செய்ய வேண்டி வரலாம். எனினும் தொடக்கத்தில் பயிற்சிக்கு நாம் நெகிழி இழைகளையே (plastic filaments) மூலப் பொருளாகப் பயன்படுத்துவோம்.
பொருள்சேர் உற்பத்தி இயந்திரங்கள்
நாம் முந்தைய கட்டுரையில் பார்த்ததுபோல பொருள்சேர் உற்பத்தி இயந்திரங்கள் படிவம் படிவமாக (slices) பாகத்தை உருவாக்குகின்றன. நாம் ஒரு 50 mm உயர பாகத்தை உருவாக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு படிவத்தின் தடிமன் 1 mm என்று வைத்துக்கொள்வோம். நாம் மேற்கண்டவாறு உருவாக்கிய முப்பரிமாண வடிவத்தை 50 படிவங்களாக முதலில் வெட்டிக்கொள்ள வேண்டுமல்லவா? இதற்கான தனிப்பட்ட மென்பொருட்கள் உள்ளன.
சீவுதல் (slicing) மற்றும் கருவிப்பாதை (tool path) தயாரித்தல்
சீவுதல் மென்பொருள் (slicer or slicing software) முதலில் பாகத்தின் வடிவத்தைத் தட்டையான படிவங்களின் அடுக்குகளாகப் பிரித்துக் கொள்கிறது. நம் எந்திரத்தின் அச்சுத்தலை (print head) ஒவ்வொரு படிவத்துக்கும் முன்னும் பின்னும் செல்லவேண்டுமல்லவா? எவ்வாறு நகர வேண்டுமென்று கணினியிலிருந்து கட்டளைகளை g-நிரல் (g-code) வடிவத்தில் எந்திரத்தின் அச்சுத்தலைக்கு அனுப்பவேண்டும். இதையே கருவிப்பாதை என்று சொல்கிறோம். மேலும் வெப்பநிலை எத்தனை செல்சியசில் இருக்கவேண்டும் போன்ற கட்டளைகளையும் இதில் சேர்க்கவேண்டும். ஏனெனில் மூலப்பொருளுக்கு ஏற்ற வெப்பநிலையை அடைந்தபின்தான் அது இளகி திரவமாகும். அதற்குப்பின்னர்தான் அச்சுத்தலையை நகர்த்தத் துவங்கவேண்டும்.
நன்றி
- 3D Printing Process by Kholoudabdolqader
இத்தொடரில் அடுத்த கட்டுரை: 3D வடிவமைப்புக்குத் திறந்தமூல மென்பொருட்கள்
பாகத்தை வடிவமைப்பதுதான் முக்கிய வேலை. அளவுரு மாதிரியமைத்தல் (parametric modeling). எளிதாக நிறுவி இயக்க சால்வ்ஸ்பேஸ் (Solvespace). மிகுதியான அம்சங்களுக்கு ப்ரீகேட் (FreeCAD). பிளெண்டர் (Blender).
ashokramach@gmail.com
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.